தருமபுரி - மார்ச் 12:
தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், மாணவியர் விடுதிகள் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக வழங்கப்படும் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றன. சிறு வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக பயன்பாட்டு உருளைகள் மட்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் 5 கிலோ சிறிய உருளைகளாக பகிர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இணையதளத்தில் ஒரே நேரத்தில் அதிகப்படியான முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை விநியோகதாரர்கள் மூலமாகவும், GPay, PhonePe போன்ற UPI செயலிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எரிவாயு உருளைகளை பதுக்கி வைப்பது அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும். இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எரிவாயு விநியோக பணியாளர்கள் அல்லது முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பொதுமக்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)