தருமபுரி - மார்ச் 12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய இலவச தொழில் முனைவோர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த நிபுணர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பயிற்சியுடன் தொழில் தொடங்குவதற்கான வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட வாழ்வியல் திறன்களும் வழங்கப்படும். மேலும் காணொளி காட்சி (LCD Projector) மூலம் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தொழில்முனைவோர்களின் அனுபவங்களும் பகிரப்படுகின்றன.
பயிற்சியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு, இரு வேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
தற்போது கீழ்க்கண்ட பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன:
-
கைபேசி பழுது நீக்குதல் – 30 நாட்கள்
-
துணி ஓவியக்கலை (ஆரி) தொழில் முனைவோர் பயிற்சி – 31 நாட்கள்
-
குழாய் பொருத்துதல் (பிளம்பிங்) பயிற்சி – 30 நாட்கள்
-
வீட்டு மின் இணைப்பு பயிற்சி – 30 நாட்கள்
இந்த பயிற்சிகளில் சேர விரும்புவோர் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2026.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, பெற விரும்பும் பயிற்சி விவரம், ஆதார் அட்டை நகல், மாற்றுச் சான்றிதழ் (TC), 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு எண்கள்: 04342-230511, 04342-234464, 9442274912, 8667679474.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)