தருமபுரி - மார்ச். 22:
தருமபுரி நகரில் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்த புதிய பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு குறைகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது குடிநீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
முன்னதாக, பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டு, லிட்டருக்கு ₹5 என்ற கட்டணத்தில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தினசரி பயணம் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இது கூடுதல் சுமையாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து நிலையம் போன்ற பொதுச் சேவை மையங்களில் அடிப்படை வசதிகள் இலவசமாகவும் சீராகவும் வழங்கப்பட வேண்டியது அவசியம். அதில் முக்கியமான ஒன்று குடிநீர். இந்நிலையில், கட்டண முறையில் குடிநீர் வழங்கப்படுவது பொதுச் சேவையின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், குடிநீர் பிரச்சினை மட்டும் அல்லாமல், புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரம், கழிப்பறை பராமரிப்பு, நிழற்குடை வசதி, அமர்வு ஏற்பாடுகள் போன்ற அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் வசதி குறைபாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சிலர், “புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதற்காகத்தான். ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலை, மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் ஒரு மையமாக மாறி வருகிறது” என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி, இலவச குடிநீர் வழங்கலை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)


