Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் கேஸ் ஏஜென்சி முறைகேடு குற்றச்சாட்டு: காலி சிலிண்டர்களுடன் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு.


பாலக்கோடு - மார்ச். 21:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கேஸ் ஏஜென்சியை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பாலக்கோடு நகரில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எச்.பி. கேஸ் ஏஜென்சியில் கடந்த 10 நாட்களாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பதிவு செய்தும் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


மேலும், சிலிண்டர் வழங்கும் போது பில் வழங்கப்படவில்லை என்றும், அரசு நிர்ணயித்த ₹964 விலைக்கு பதிலாக ₹1100 வரை வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் கள்ள சந்தையில் ₹1500 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


இதற்கு மேலாக, சிலர் சிலிண்டர் பெறாத போதிலும், பெற்றதாக குறுஞ்செய்தி (SMS) வந்ததுடன், வங்கி கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் குறித்து சந்தேகமடைந்த பொதுமக்கள் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ஆனால், திருப்திகரமான பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென பாலக்கோடு – தருமபுரி நெடுஞ்சாலையில் காலி சிலிண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies