தருமபுரி - மார்ச் 11:
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க பாளையம் சுங்கசாவடி டோல் நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு முள்வேலி அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி அடுத்துள்ள சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. ரெட்டிஹள்ளி பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி – பென்னாகரம் சாலைக்கு மேல் மேம்பாலம் அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சர்வீஸ் சாலையோரத்தில் தருமபுரி நகர பகுதியிலிருந்து இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலையை பராமரித்து வரும் பாளையம் சுங்கசாவடி டோல் நிறுவனம் சார்பில் அந்த பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, திட்ட அலுவலர் நரேஷ் தலைமையில் 200 மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க முள்வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் சாலை பாதுகாப்பு அலுவலர் ஞானசேகர் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திட்ட அலுவலர் நரேஷ் தெரிவித்ததாவது: சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பென்னாகரம் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையோரத்தில் கோழி மற்றும் மீன் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருந்தது. பயணிகளின் புகாரின் பேரில் அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு 200 மரக்கன்றுகள் நட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)