Type Here to Get Search Results !

தருமபுரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை.


தருமபுரி - மார்ச் 14:


தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தருமபுரி மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞருக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமான மாவட்டம் என குறிப்பிட்டு, இந்த மாவட்ட மக்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.


திராவிட மாடல் அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மகளிர் நலனுக்காக மகளிர் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 920 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 22 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் தினமும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருவதாகவும் கூறினார். அதேபோல் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதுடன் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.


இலவச லேப்டாப் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 17 ஆயிரம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருவதாகவும் கூறினார். மேலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இலிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 8 லட்சம் வீடுகள் கட்டுதல், 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், பள்ளிவிட்டுப்போக்கு முழுமையாக தடுப்பது, அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை–அளூர் நான்கு வழிச்சாலை திட்டம் ₹58 கோடி, தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ₹65 கோடி மதிப்பீட்டில் மின் இணை உற்பத்தி நிலையம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ₹85 கோடி மதிப்பீட்டில் மின் இணை உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹1.41 லட்சம் கோடி வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ₹3,000 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், வீடு என்பது மக்களின் அடிப்படை தேவையாக இருப்பதால் அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள், வீடு கட்டும் ஆணைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உதவிப் பொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies