தருமபுரி, மார்ச். 31:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களிலும், குறிப்பாக எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) போன்ற பயன்பாட்டு பொருட்களிலும் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ஆர். சதீஷ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் இன்று (31.03.2026) தொடங்கி வைத்தார்.
வரும் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில், “100% வாக்களிப்போம்” என்ற நோக்கத்துடன், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. வீடுகள், கடைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொருட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதன் மூலம், நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பான தகவல்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்த வகையான புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் திரு. ச. சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. அ. கே. கவிதா, மாவட்டத் தேர்தல் நடத்து அலுவலர் திரு. பெ. கோவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

