இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கலைஞர்களின் திறமையை பாராட்டும் வகையில் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்கள் மூலம் ஆண்டுதோறும் கலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2002–2003 ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலைத் திறனை அடிப்படையாக கொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2021–2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 15 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. 2025–2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் தருமபுரி மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் வழங்கப்பட உள்ளதால், இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைப்பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பம்பை ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை), வில்லிசை உள்ளிட்ட செவ்வியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் விருதுகள்
18 வயதிற்குட்பட்டவர்கள் – கலை இளமணி விருது
19 முதல் 35 வயது வரை – கலை வளர்மணி விருது
36 முதல் 50 வயது வரை – கலை சுடர்மணி விருது
51 முதல் 65 வயது வரை – கலை நன்மணி விருது
66 வயதுக்கு மேற்பட்டவர்கள் – கலை முதுமணி விருது
தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.
தேசிய விருது, மாநில விருது (கலைமாமணி) அல்லது ஏற்கனவே மாவட்டக் கலை மன்ற விருது பெற்றவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் வயது சான்று, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (3) மற்றும் கலை அனுபவச் சான்றுகள் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0427–2386197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #TamilArts #FolkArts #Kalaivirudhu #TamilCulture #Artists #TamilNews
.gif)

.jpg)