தருமபுரி - மார்ச் 12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் பெட்ரோல் மற்றும் டீசல் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் நோடல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகள், காலை சிற்றுண்டி திட்டத்திற்காக வழங்கப்படும் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறு வணிகர்களுக்கு வழங்கப்படும் வணிக பயன்பாட்டு உருளைகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் 5 கிலோ சிறிய உருளைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இணையதளத்தில் ஒரே நேரத்தில் அதிகமான முன்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதால் சில நேரங்களில் முன்பதிவில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் தேவையான எரிவாயு உருளைகளை விநியோகதாரர்கள் மூலமாகவும், GPay, PhonePe போன்ற UPI சேவைகள் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
எரிவாயு உருளைகளை பதுக்கி வைப்பது அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விநியோக பணியாளர்கள் அல்லது முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பொதுமக்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பி.கே. கோவிந்தன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நோடல் அலுவலர் அக்ஷய், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நோடல் அலுவலர் சந்தோஷ்குமார், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நோடல் அலுவலர் திவ்யான்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)