தருமபுரி – மார்ச் 16:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் 15.03.2026 முதல் தருமபுரி மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இதையொட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறிஞ்சி கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
தேர்தல் முக்கிய தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய தேதிகள் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 30.03.2026 (திங்கட்கிழமை)
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: 06.04.2026 (திங்கட்கிழமை)
வேட்பு மனுக்கள் பரிசீலனை: 07.04.2026 (செவ்வாய்க்கிழமை)
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: 09.04.2026 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நாள்: 23.04.2026 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நாள்: 04.05.2026 (திங்கட்கிழமை)
தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள்: 06.05.2026 (புதன்கிழமை)
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள்
தருமபுரி மாவட்டத்தில் கீழ்க்கண்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது:
பாலக்கோடு (057)
பென்னாகரம் (058)
தருமபுரி (059)
பாப்பிரெட்டிப்பட்டி (060)
அரூர் (தனி) (061)
இந்த தொகுதிகளில் வேட்பு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் விவரம்
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த வாக்காளர்கள் 12,40,108 பேர் உள்ளனர்.
ஆண்கள் – 6,24,647
பெண்கள் – 6,15,311
மூன்றாம் பாலினம் – 150
இதில்,
18–19 வயது வாக்காளர்கள்: 28,586
20–29 வயது வாக்காளர்கள்: 2,58,232
85 வயதுக்கு மேற்பட்டோர்: 9,541
மாற்றுத்திறனாளிகள்: 11,345
Service Voters: 1,601 பேர் உள்ளனர்.
பதட்டமான வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் 71 பதட்டமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் Webcasting மற்றும் Video Coverage மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கண்காணிப்பு நடவடிக்கைகள்
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்
3 நிலையான கண்காணிப்பு குழுக்கள்
என மொத்தம் 15 பறக்கும் படைகள் மற்றும் 15 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரம்
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசார வாகனங்கள் உள்ளிட்டவற்றை நடத்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன்பாக அனுமதி பெற வேண்டும். இதற்காக அரசியல் கட்சிகள் https://suvidha.eci.gov.in இணையதளம் அல்லது ECINET செயலி வழியாக குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் ஒத்திவைப்பு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால்:
மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
போன்ற கூட்டங்கள் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க வசதி
தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகளில் தெரிவிக்கலாம்:
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 7017
WhatsApp: 94439 47017
மின்னஞ்சல்: controlroomdpi@gmail.com
C-Vigil App செயலி
இந்த வழிகளில் பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் சுமார் 12,000 மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கவிதா, மாவட்ட வன அலுவலர் கா. இராஜாங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)