Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி கவலைக்கிடம்.


பாலக்கோடு, ஏப்ரல். 28:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 90 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்தும் இருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி காலை, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தண்டபானி – அபிராமி தம்பதியரின் 3 வயது மகள் தாரிகா பள்ளி நுழைவாயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமியின் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டு காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி தீவிர சிகிச்சையில் உள்ளார்.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி சுற்றுச்சுவர் ஆபத்தான நிலையில் இருப்பதை பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், இது பள்ளி வேலைநாளில் நடைபெற்றிருந்தால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர். சம்பவத்திற்கு காரணமான அலட்சியத்துக்கு அரசு பொறுப்பு ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் கிராம மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies