தருமபுரி – ஏப்ரல் 24:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026க்கு உட்பட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) அனைத்தும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு சீல் செய்யும் பணி இன்று (24.04.2026) நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன் கூடிய கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் அனைத்தும் தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இப்பணிகள் தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், இ.ஆ.ப., திருமதி வந்தனா வைத்யா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டன. இவ்விடங்களில் பாதுகாப்பு வலுவாக ஏற்பாடு செய்யப்பட்டு, 330 ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், எந்தவித முறைகேடும் நடைபெறாத வகையில் 185 சிசிடிவி கேமராக்கள் 24x7 கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இந்த கண்காணிப்பை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு மையங்களில் தடையற்ற மின்சாரம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கால அட்டவணையின் படி, வாக்கு எண்ணும் நாளில் மட்டுமே இந்த அறைகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)