தருமபுரி, ஏப்ரல். 29:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையில், சொகுசு காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். பாலக்கோடு அருகே கரகதஅள்ளி சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓசூரிலிருந்து தருமபுரி நோக்கி வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், காரில் 8 மூட்டைகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், தூலிப் உள்ளிட்ட பான் மசாலா (குட்கா) பொருட்கள் சுமார் 81 கிலோ எடையில் கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் காரையும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், காரை ஓட்டியவர் ராஜஸ்தான் மாநிலம் குடமலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (28) என்பது தெரியவந்தது. இவர் பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி குட்கா பொருட்களை கடத்தி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரை தருமபுரி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)