Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே இழப்பீடு வழங்காமல் நிலம் கைப்பற்ற முயற்சிப்பதாக பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மீது விவசாயி குற்றச்சாட்டு.


பாலக்கோடு, ஏப்ரல். 29:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜக்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலத்தை, உரிய இழப்பீடு வழங்காமல் பெட்ரோலிய நிறுவனம் கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜக்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு மொத்தம் 1.20 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காகவும், பொதுப்பணித்துறைக்காகவும் சுமார் 1 ஏக்கர் நிலம் அரசால் எடுக்கப்பட்டது. இதனால் அவரிடம் மீதமிருந்த 20 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில், தற்போது பாரத் பெட்ரோலிய நிறுவனம் கிடங்கு அமைக்கும் திட்டத்தின் கீழ், மேலும் 50 சென்ட் நிலத்தை அவர்களின் ஒப்புதல் இன்றி கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக ராமமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சூழலில், இன்று காலை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நிலத்தை கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர்.


இதுகுறித்து ராமமூர்த்தி கூறுகையில்,
“எங்களுடைய வாழ்வாதாரம் இந்த நிலம் மட்டுமே. ஏற்கனவே பெரும்பாலான நிலத்தை இழந்துவிட்டோம். மீதமுள்ள நிலத்தையும் இழந்தால் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும். உரிய இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அத்துமீறி நிலத்தை எடுக்க முயன்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என வேதனையுடன் தெரிவித்தார்.


இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies