Type Here to Get Search Results !

100% வாக்குப்பதிவு இலக்கு: தருமபுரியில் மாபெரும் கையெழுத்து இயக்கம்; ஆட்சியர் சதீஸ் தொடங்கி வைத்தார்.


தருமபுரி – மார்ச் 17:


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2026) தொடங்கி வைத்தார்.


வரும் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, “என் வாக்கு விற்பனைக்கல்ல – தவறாமல் வாக்களிப்பேன்” என்ற உறுதிமொழியுடன் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்தனர்.


தேர்தல் விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் “100% வாக்களிப்போம் – வலுவான ஜனநாயகத்தை உருவாக்குவோம்” என்ற வாசகத்துடன் சிறப்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. இதில் ஆட்சியர் சதீஸ் புகைப்படம் எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பேருந்து நிலையத்திலும் இதேபோன்ற கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார். தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதிக்கோன்பாளையம் பகுதியில், பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் (SIPCOT) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், நகராட்சி ஆணையர் வசந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி, வட்டாட்சியர் ஜெ. சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies