தருமபுரி, பிப்ரவரி, 07:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வில் பாடத்திட்டத்திற்கு முரணான வினாக்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தத் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் 2025 ஆம் ஆண்டிற்கான 1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பும் நோக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 2025 டிசம்பர் 21 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 1.78 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
பாடத்திட்டத்திற்கு புறம்பான வினாக்கள் – தேர்வர்கள் அதிர்ச்சி
தேர்வர்கள் கூறுகையில், அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி
-
பொதுஅறிவு – 80 வினாக்கள்
-
தமிழ் – 10 வினாக்கள்
-
ஆங்கிலம் – 10 வினாக்கள்
-
உளவியல் – 40 வினாக்கள்என மொத்தம் 140 வினாக்கள் (70 மதிப்பெண்கள்) இடம்பெற வேண்டும்.
ஆனால், நடைபெற்ற தேர்வில் தமிழ் பாடப்பகுதிக்கான 10 வினாக்கள் இடம்பெறாமல், அதற்கு பதிலாக உளவியல் பாடப்பகுதியில் கூடுதல் வினாக்கள் சேர்க்கப்பட்டதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
“ஐந்து ஆண்டுகள் உழைப்பு வீணாகும் நிலை”
“நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தேர்விற்காக தயாராகி வருகிறோம். வயது வரம்பு காரணமாக பலருக்கு இது கடைசி வாய்ப்பு. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயாரானோம். ஆனால் தேர்வில் அதற்குப் புறம்பான வினாக்கள் வந்ததால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது”என தேர்வர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும், தமிழ் பாடம் எளிதாக மதிப்பெண் பெறக்கூடிய பகுதியாக இருந்த நிலையில், அதை நம்பி பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உளவியல் பாடப்பகுதியில் கணிதத் தன்மை அதிகம் உள்ளதால் அனைவருக்கும் சம வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாகவும், இது தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே,
-
அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்
-
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
-
மீண்டும் ஒரே மாதிரியான, நியாயமான முறையில்
மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் ஒருமித்த குரலில் தமிழக அரசையும், தேர்வாணையத்தையும் வலியுறுத்தி வருகின்றனர்.
.gif)

.jpg)