தருமபுரி | பிப்ரவரி 16:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.02.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “தோழி” பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள “தோழி” பணிபுரியும் மகளிருக்கான விடுதி கட்டடம் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.
நல்லம்பள்ளி வட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.5.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதி, தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகிய மூன்று அடுக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய விடுதியில்:
-
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
-
சிசிடிவி கேமரா பாதுகாப்பு
-
சுகாதாரமான கழிவறைகள்
-
அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள்
என அனைத்து தேவைகளும் செய்யப்பட்டுள்ளன.
பணிபுரியும் பெண்கள் மட்டுமன்றி, பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் உள்ளிட்ட குறுகிய கால தேவைகளுக்காக நகரங்களுக்கு வரும் பெண்களும் பாதுகாப்பாக தங்கிடும் வகையில் இவ்விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கலாவதி, தமிழ்நாடு கைம்பெண் நல வாரிய உறுப்பினர் எம். ரேணுகாதேவி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)