தருமபுரி | பிப்ரவரி 06:
தருமபுரி–அரூர் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், ராஜாபேட்டை பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி முதல் அரூர் வரை செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலை வழியாக மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் நோக்கில், கடந்த 2022–2023 ஆம் ஆண்டுகளில் ரூ.313.50 கோடி மதிப்பில் இந்தச் சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தருமபுரி அடுத்த ராஜாபேட்டை பகுதியில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் பராமரிப்பு காலம் காரணமாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பராமரிப்பு காலம் முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், தருமபுரி–மொரப்பூர் வரை அமைக்கப்பட்டுள்ளதைப் போல ராஜாபேட்டை பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை.
இதனால் மழைக்காலங்களில் சாலையோரங்களில் நீர் தேங்கி, குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாகவும் கூறி, ராஜாபேட்டை பகுதி மக்கள் தருமபுரி–மொரப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தருமபுரி டவுன் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவிந்தசாமி, ராஜாபேட்டை பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
.gif)

.jpg)