தருமபுரி | பிப்ரவரி 09:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியில் வசிக்கும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரால், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடத்தப்படும் தேவாதியம்மன் திருவிழா இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெரியாம்பட்டியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக வசித்து வருகின்றனர். தொழில் மற்றும் வியாபாரம் நலமுடன் இருக்க வேண்டி, மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, ஆடு வெட்டி பூஜை செய்து, கறி விருந்து சமைத்து வெளியில் எடுத்து செல்லாமல் அங்கேயே உண்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், வனப்பகுதியில் பச்சை பந்தல் அமைத்து, சாமிக்கு கரகம் சிங்காரித்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் நிறைவடைந்த பின், முதலில் ஒரு ஆடு பலியிட்டு சிறப்பு பூஜை செய்து, அதன் இறைச்சியை தீயில் சுட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் பிரசாதமும், ஆட்டின் இறைச்சியும் அந்த சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மட்டும் உண்ணும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது; பிறருக்கு வழங்கப்படுவதில்லை.
திருவிழாவின் ஒரு பகுதியாக, சுமார் 500 ஆடுகள் பலியிடப்பட்டு, சுமார் 1,000 குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. பெண்கள் பங்கேற்பு இல்லாமல், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆடு வெட்டி, சமைத்து, கூட்டு கறி விருந்து நடைபெறுவது இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டது. இதில் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)