மனுவில், புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததன் பின்னர் தருமபுரி நான்கு ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் அனைத்தும் நகருக்குள் வந்து செல்வதால் சிக்னல்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளி பேருந்துகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் வகுப்புகளுக்கு தாமதமாக செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நெரிசலைக் குறைக்க, பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் வெளியூர் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை நகருக்குள் அனுமதிக்காமல் வெளிவட்டச் சாலை வழியாக இயக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், பாரதிபுரம் 100 அடி சாலையை சேலம்–கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையுடன் இணைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய தருமபுரி நோக்கி செல்லும் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சவுளூர் மேம்பாலத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் முறையான சர்வீஸ் சாலைகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும், சோகத்தூர் கூட்ரோடு சந்திப்பில் சர்வீஸ் சாலைக்கான இணைப்புப் பாதை இல்லாதது போக்குவரத்துக்கு பெரும் தடையாக உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் (NHAI) உடனடியாக பேசி, விடுபட்ட சர்வீஸ் சாலை பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மாற்று வழித்தடங்களை இறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் நலன் கருதி, நிலுவையில் உள்ள சாலை திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, போக்குவரத்து நெரிசலற்ற தருமபுரியை உருவாக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
.gif)

.jpg)