Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே கல் குவாரி விவகாரத்தில் தாக்குதல்: அவமானத்தில் தொழிலாளி தற்கொலை; நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பென்னாகரம், பிப். 10:


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நத்தஅள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் கூலி தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நத்தஅள்ளி பகுதியில் ரத்னவேல் என்பவர் கல் குவாரி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்துள்ளனர். மேலும், கற்களை வெடிவைத்து எடுப்பதால் சிதறும் கற்கள் அருகிலுள்ள வீடுகளில் விழுந்து சேதம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு காயம் ஏற்படும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அனுமந்தன் (32) என்பவர், கல் குவாரியில் வெடி வைக்க வேண்டாம் என ரத்னவேலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அனுமந்தனை தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த நிலையில் இருந்த அனுமந்தன், இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


அனுமந்தனின் மரணத்திற்கு கல் குவாரி நடத்தி வரும் ரத்னவேலே காரணம் எனக் கூறி, அவரது மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இன்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.


இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி – பென்னாகரம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளப்பட்டி சாலையில் அமர்ந்து மற்றும் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

தற்கொலை எதற்கும் தீர்வல்ல:

மன உளைச்சல், பயம் அல்லது அழுத்தம் காரணமாக யாரும் தனியாக முடிவெடுக்க வேண்டாம். பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு. உங்களோடு பேசவும், உதவி பெறவும் வழிகள் உள்ளன. தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் உடனடியாக நம்பிக்கையான நபர்களிடம் பேசுங்கள் அல்லது உதவி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

உதவி எண்கள் (இந்தியா):

  • தேசிய மனநல உதவி எண்: 14416 / 1-800-891-4416

  • அவசர உதவி: 112

உயிர் மதிப்புமிக்கது. உதவி கேட்பது தைரியத்தின் அடையாளம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies