தருமபுரி | பிப்ரவரி 10:
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுவிநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், டிஎன்சிஎஸ்சி (TNCSC) எடை தராசங்களை நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையத்துடன் இணைத்து, சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தி, நகர செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்கி, பிப்ரவரி இறுதிக்குள் ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரப்பட வேண்டும், ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், மகளிர் நியாய விலை கடைகளை அரசே நேரடியாக நடத்தி, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)