பாலக்கோடு, ஏப்ரல். 15:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு, அவருடன் செல்ஃபி எடுத்து உற்சாகம் வெளிப்படுத்தினர். தருமபுரியில் இன்று (ஏப்.15) மாலை 5 மணியளவில் தடங்கம் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே திமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.
அதன்படி, பாலக்கோடு தொகுதியில் டி.என்.வி. செந்தில்குமார் (திமுக), பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.எம். தமிழ் குமரன் (காங்கிரஸ்), தருமபுரி தொகுதியில் மருத்துவர் இளங்கோவன் (தேமுதிக), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பழனியப்பன் (திமுக), அரூர் தொகுதியில் சண்முகம் (திமுக) ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட பிரச்சாரத்தை முடித்து, முதல்வர் நேற்று இரவு தருமபுரி வந்தடைந்து, பாரதிபுரத்தில் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று அதிகாலையில் அவர் நடைபயிற்சி மேற்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென பாலக்கோடு நகரில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பாலக்கோடு கோட்டை தெருவில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடை வீதி, பேருந்து நிலையம், தக்காளி மண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப்பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது, ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு பெற்றோர் கேட்டதையடுத்து, அந்த குழந்தைக்கு “திராவிடன்” என முதல்வர் பெயர் சூட்டினார்.
நடைபயிற்சி பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் பலர் முதல்வருடன் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
.gif)

.jpg)