பாலக்கோடு | பிப்ரவரி 13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயல்கிறது என குற்றம்சாட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான கே.பி. அன்பழகன் தலைமையேற்றார். அதிமுக நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்தும் அதை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. தற்போது மத்திய அரசு 125 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தும் நிலையில், அதனை பொறுக்காமல் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 125 நாள் வேலை திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)