பாலக்கோடு | பிப்ரவரி 13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயலும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) அரசை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலக்கோடு பேரூர் கழக செயலாளர் பி.கே. முரளி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், சட்டமன்ற பொறுப்பாளர் அரியப்பன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால், அரசு வழக்கறிஞர் முருகன், இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார தலைவர் கணசேன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் (MGNREGA) கீழ் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை மாற்ற முயற்சிப்பதை கடுமையாக எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி புதிய திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், புதிய திட்டத்தில்:
-
கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படும்
-
வேலை மற்றும் கூலி உறுதி இல்லை
-
மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்
-
ஒன்றிய அரசு குறிப்பிடும் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய கட்டுப்பாடு இருக்கும்
-
ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை இல்லா தடைக்காலம் ஏற்படும்
என்ற அபாயங்கள் உள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)