தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மலையூர் கிராமத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருமொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் கி.திருச்செல்வன் தலைமையில் வரலாற்று மாணவர்கள் ம.கவியரசு மற்றும் கி.கௌதம் ஆகியோர் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டபோது, ‘வாரக்கொல்லை’ என அழைக்கப்படும் இடத்தில் பெரிய பாறையின் மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.
எழுத்தமைப்பு மற்றும் மொழிநடை அடிப்படையில் இக்கல்வெட்டு பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கல்வெட்டில் முதல் மூன்று வரிகள் தமிழிலும், பின்னர் ஐந்து வரிகள் தெலுங்கு மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பகுதியில் “பெருமாளாச்சாரி” என்ற ஆச்சாரி இனத்தவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல், தெலுங்கு பகுதியில் “நஞ்சுபூண்டி அச்சாரி” என்ற பெயர் காணப்படுகிறது. இது ஆச்சாரி இனத்தவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்துள்ளது.
மேலும், வாபிலி, பிரலி கிராமம், பெரியூரி ஆகிய ஊர்ப்பெயர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. “ஏ சேவேலி” என்ற ஊரின் எல்லைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு மொழியில் “ஆலம்பாடி” என குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப்பெயர், தற்போது வழங்கும் “ஆலமரத்துக்கொட்டாய்” என்ற பெயரின் மாறுபாடாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேபோல், இன்றைய “பிக்கிலி” மற்றும் “பெரியூர்” ஆகிய ஊர்கள் கல்வெட்டில் “பிரலி” மற்றும் “பெரியூரி” எனக் கூறப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டு, அப்பகுதியில் வாழ்ந்த சமூகத்தினரின் இருப்பிடங்கள், ஊர்ப்பெயர்கள் மற்றும் எல்லைக் குறிப்புகளை பதிவு செய்துள்ள வரலாற்றுச் சான்றாகக் கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு, தருமபுரி மாவட்டத்தின் பன்மொழி மற்றும் பல்சமூக வரலாற்றை வெளிக்கொணரும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
கல்வெட்டு வாசகம்
தமிழ்:
-
பெருமா
-
ளச்சாரி
-
சாலக
தெலுங்கு:
-
நஞ்சுபூண்டி அச்சாரி
-
அலம்படி வாபிலி கல்
-
பிரலி கிராம பெரியூரி
-
ஏ செவேலி
இக்கல்வெட்டு குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)