Type Here to Get Search Results !

தருமபுரி அருகே குடியிருப்புகளையொட்டி கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.


தருமபுரி | பிப்ரவரி 10:


தருமபுரி மாவட்டம், கண்ணூர் அடுத்த கும்பளப்பாடி கிராமத்தில், குடியிருப்புகளை ஒட்டி கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கும்பளப்பாடி கிராமத்தில் சுமார் 65 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளையொட்டி இருந்த விவசாய நிலத்தை, விவசாயம் செய்வதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் குறைந்த விலையில் வாங்கியதாகவும், தற்போது அங்கு கல்குவாரி அமைக்க முயற்சிப்பதாகவும் கிராமமக்கள் குற்றம்சாட்டினர்.


இதனை அறிந்த கிராமமக்கள், அங்கு பொக்லைன் (JCB) இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது தடுத்து நிறுத்தி, அரசு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டதாக கூறி, கிராமமக்கள் அதைத் தடுத்து நிறுத்தி, பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, நுழைவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மற்றும் வெளியே அரசு வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அப்போது, குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி அமைக்கப்பட்டால் வீடுகளின் மீது கற்கள் விழும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பாக வசிக்க முடியாத நிலை உருவாகும் என்றும் கிராமமக்கள் தெரிவித்தனர். எனவே, இந்த இடத்தில் கல்குவாரி அமைக்க எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மேலும், இந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் எனவும் கிராமமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies