Type Here to Get Search Results !

கடகத்தூரில் கரும்பாலை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.


தருமபுரி | பிப்.05:


தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடகத்தூர் மற்றும் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி பகுதிகளில் இயங்கி வரும் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிப்பு கரும்பாலை (கிரஷர்) உரிமையாளர்களுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி கடகத்தூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தரமானதாகவும், எந்தவித கலப்படமுமின்றி தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்புரை ஆற்றினார். கடகத்தூர் கரும்பாலை சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராமு, பொருளாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலையில், தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னராகிய இ.பி. இன்ஃபோசிஸ் சார்பில் பயிற்றுநர் காமேஷ் பயிற்சி வழங்கினார். கடகத்தூர், பாப்பாரப்பட்டி, வேலம்பட்டி பகுதிகளில் இயங்கி வரும் கரும்பாலை உரிமையாளர்கள் நற்சுவை சுகுமார், வேலம்பட்டி முருகேசன் உள்ளிட்ட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.


மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தனது தலைமை உரையில், தருமபுரி மாவட்டத்தில் தயாரித்து உள்ளூர், வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை எந்தவித கலப்படமுமின்றி, செயற்கை நிறமூட்டிகள் மற்றும் வேதிப்பொருட்கள் சேர்க்காமல், சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். கரும்பாலைகளில் உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த அடிப்படை பயிற்சி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், கலப்படம் இன்றி உற்பத்தி நடைபெறுவதை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் அவசியம் என்றும், அனைத்து ஆலைகளும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற்று வணிகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தனது உரையில், பொட்டலம் இடப்பட்ட வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை பாக்கெட்டுகள் மற்றும் மூட்டைகளில் உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், நுகர்வோர் தொடர்பு எண், எடை, உட்காரணிகள், சைவ/அசைவ குறியீடு ஆகியவை கட்டாயமாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணவுப் பொருள் பாக்கெட்டுகள் மூலம் நேரடியாக செயல் விளக்கமாக எடுத்துரைத்தார்.


பயிற்சியில், கரும்பாலை தயாரிப்பு கூடம் மற்றும் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பது, பணியாளர்களின் தன்சுத்தம், வெல்லம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கரும்புகள் சுத்தமாக இருப்பது ஆகியவை அவசியம் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தயாரிப்பில் வேதிப்பொருட்கள், செயற்கை நிறமூட்டிகள், வெண்மையாக்க சர்க்கரை அல்லது மைதா போன்றவை பயன்படுத்தக் கூடாது என்றும், ஈ, பூச்சி, எலி, பறவைகள், நாய், பூனை போன்ற கால்நடைகள் நடமாட்டம் இல்லாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பணியாளர்கள் உரிய மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், தயாரித்த வெல்லம் வைக்கும் அறைகளில் தேவையற்ற வேதிப்பொருட்கள் அல்லது விவசாயப் பொருட்கள் வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


பயிற்சியின் நிறைவாக, உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கான விண்ணப்பங்கள் கரும்பாலை உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies