Type Here to Get Search Results !

அரூரில் ஆர்ப்பாட்டம் பதற்றம்: பாஜக–விசிக இடையே கைகலப்பு, போலீசர் உட்பட 2 பேருக்கு காயம்.


அரூர், பிப்.19:
 


தருமபுரி மாவட்டம் அரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கும் ஒரு போலீசருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அரூரில் பாஜகவின் பட்டியல் பிரிவு சார்பில், மத்திய அரசு வழங்கி வரும் நிதியை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி 19.02.2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கூட்டணிக் கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜக மாவட்ட தலைவர் சரவணன் பேசுகையில், மத்திய அரசின் நிதிகள் தமிழ்நாடு அரசால் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.


இதனை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மூவேந்தன் தலைமையில் அக்கட்சியினர் அங்கு திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.


முன்னாள் எம்எல்ஏ முருகன் சமாதானம் செய்ய முயன்றும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. கட்சிக் கொடிகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீசருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரையும் பிரித்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இந்த தகராறு தொடர்பாக பாஜக மற்றும் விசிகவினர் இரு தரப்பினரும் அரூர் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஏற்பட்ட இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பிரச்சார காலத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies