தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்படும் சில அரசு பேருந்துகளில் பாதுகாப்பு உபகரணங்களின் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகள் முழுமையாக வண்ணம் பூசப்பட்டு, அவற்றின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் சேவை விவரங்கள் தெளிவாக தெரியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
![]() |
| அரசு பேருந்தில் காணப்படும் தீயணைப்பு கருவியின் நிலை. |
அவசரநிலைகளில் உயிர் காக்கும் முக்கிய பாதுகாப்பு சாதனமாகும் தீயணைப்பு கருவி. இதன் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, சேவை செய்யப்பட்ட விவரம் மற்றும் அழுத்த நிலை குறியீடு போன்ற தகவல்கள் தெளிவாக காணப்பட வேண்டும். ஆனால் சில பேருந்துகளில் இத்தகவல்கள் வண்ணம் பூசப்பட்டதால் மறைந்துள்ளதாக கூறப்படுவது கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகிறது.
- Motor Vehicles Act, 1988 இந்தச் சட்டத்தின் கீழ் பயணிகள் பாதுகாப்பு முதன்மை கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
- Central Motor Vehicles Rules, 1989 இந்த விதிகளின் படி, பொதுப் பயன்பாட்டு பேருந்துகளில் தீயணைப்பு கருவி கட்டாயமாக பொருத்தப்பட்டு, செயல்படும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிபுணர் கருத்து.
இது குறித்து சேஃப் குரு நிறுவன இயக்குனர் மற்றும் தொழில் பாதுகாப்பு நிபுணரும் ஊடகவியலாளருமான வினோத்குமார் இதுகுறித்து கூறுகையில்,
“தருமபுரி மட்டுமல்ல தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் தீயணைப்பு கருவி இருப்பது மட்டுமே போதுமானதல்ல. அது செயல்படும் நிலையில் உள்ளதா என்பது மிக முக்கியம். கருவி முழுவதும் வண்ணம் பூசப்பட்டால், அதன் காலாவதி தேதி மற்றும் சேவை விவரங்களை சரிபார்க்க முடியாது. இது பாதுகாப்பு நடைமுறைகளுக்கு எதிரானது. அவசரநிலையில் கருவி செயல்படாதபட்சத்தில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு பேருந்துகளில் பாதுகாப்பு உபகரணங்கள் காலம்தோறும் ஆய்வு செய்யப்பட்டு, பதிவுகள் பராமரிக்கப்பட வேண்டும், தனியார் பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்களில் காட்டும் அக்கறை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு பேருந்துகளிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு பேருந்துகளில் பாதுகாப்பு தரநிலைகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பயணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான இக்குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)



