பென்னாகரம் | பிப்.03 :
பென்னாகரம் அருகே உள்ள சிகரலஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற ஒரு புதுமனை புகுவிழா நிகழ்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கையின் புதுமனை புகுவிழாவுக்கு பாரம்பரிய சீதனப் பொருட்களுக்கு மாற்றாக 500 மரக்கன்றுகளை வழங்கிய அண்ணனின் செயல், சமூகத்தில் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது.
சிகரலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இயற்கை பாதுகாப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மரக்கன்றுகள் நடுவதையே தனது முழுநேர பணியாக மேற்கொண்டு வரும் இவர், சமீபத்தில் தனது வீட்டுப் புதுமனை புகுவிழாவுக்கே மஞ்சள் பைகளில் அழைப்பிதழ்களை அச்சிட்டு விநியோகித்து, பசுமை விழிப்புணர்வை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தைப்பூசம் மற்றும் சுபமுகூர்த்த தினமான நேற்று, அருகிலுள்ள சின்னப்ப நல்லூரில் அவரது தங்கை மீனா – ரமேஷ் தம்பதியரின் புதிய இல்லத்தில் புதுமனை புகுவிழா நடைபெற்றது. வழக்கம்போல் அண்ணனின் சீதனமாக என்ன கொண்டு வரப்படுமென உறவினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 500 மரக்கன்றுகளுடன் முத்துக்குமார் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.
அண்ணன் கொண்டு வந்த மரக்கன்றுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மத்தியில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின. அனைவரும் தன்னார்வமாக மரக்கன்றுகளை பெற்றுச் சென்று, தங்களது வீடுகள் மற்றும் நிலங்களில் நடவு செய்வதாக உறுதியளித்தனர்.
பாரம்பரிய சீதன முறைக்கு மாற்றாக பசுமையை முன்னிறுத்திய இந்த முயற்சி, சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், “ஒரு குடும்ப விழா – நூற்றுக்கணக்கான மரங்கள்” என்ற புதிய சமூகச் செய்தியை விதைத்துள்ளது. தங்கையின் கிரகப்பிரவேச விழாவை சுற்றுச்சூழல் விழிப்புணர்வாக மாற்றிய முத்துக்குமாரின் செயல், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
.gif)

.jpg)