தருமபுரி | பிப்ரவரி 10:
பென்னாகரம் தாலுக்கா, ஏரியூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு, மாவட்ட நியமன அலுவலர் மரு. கைலாஷ்குமார் அவர்களின் மேற்பார்வையில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் உள்ளிட்ட குழுவினரால் நடத்தப்பட்டது.
ஆய்வின்போது, விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செயற்கை நிறமேற்றிகள் சேர்க்கப்பட்ட கார வகைகள், தரம் குறைந்த நாள்பட்ட கப்கேக்குகள், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்கள், பார்வைக்கும் விநியோகத்திற்கும் வைத்திருந்த சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சுமார் 10 கிலோ அளவில் சில உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் இருந்து பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டன.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்கள், ஒரு உணவகத்தில் ப்ளேட்டில் உணவு பரிமாற பயன்படுத்தப்பட்ட நெகிழி பேப்பர்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகள் மீறியதாக 2 பேக்கரி, 2 உணவகங்கள் மற்றும் 1 துரித உணவகம் என மொத்தம் 5 கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 2 கடைகளுக்கு தலா ரூ.2,000 மற்றும் 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 என மொத்தம் ரூ.7,000 அபராதம் வசூலித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சமையல் எண்ணெயை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றும், மீதமுள்ள சமையல் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட RUCO டீலரிடம் ஒப்படைத்து உரிய தொகை பெறும் நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நெகிழி மாற்றுப் பொருட்கள் குறித்த ஸ்டிக்கர்கள், உணவு பாதுகாப்பு புகார் எண் 9444042322, மேலும் “எங்கள் உணவகங்களில் செயற்கை நிறமேற்றிகள் பயன்படுத்தப்படுவதில்லை” என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் கடைகளில் ஒட்டப்பட்டன.
சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு பேக்கரி மற்றும் ஒரு துரித உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட பாதாம் பவுடர் மற்றும் உரிய லேபிள் விவரங்கள் இல்லாத சில்லி சிக்கன் மசாலா பவுடர் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வறிக்கை அடிப்படையில் விதிமுறைகள் மீறப்பட்டால், தயாரிப்பாளர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், லேபிள் விவரங்கள் இல்லாத எந்த உணவுப் பொருட்களையும் வாங்கவோ, விற்கவோ கூடாது என கடை உரிமையாளர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)