Type Here to Get Search Results !

தருமபுரியில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் – 21ஆம் தேதி அமைச்சர் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு.


தருமபுரி, பிப்.19:
 


தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் 21.02.2026 அன்று துவக்கி வைக்கப்பட உள்ளது. இந்த மையத்தை எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் துவக்கி வைக்கவிருக்கிறார்.


இதனை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 17.08.2025 அன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.11.30 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது செல்லியம்பட்டி கிராமத்தில் நிரந்தர மையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான முன்னோட்டமாக தற்காலிக மையம் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட உள்ளது.


தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் மொத்த புளி உற்பத்தியில் 25% க்கும் மேலான பங்காற்றுகிறது. அதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆண்டுக்கு சுமார் 20,570 மெட்ரிக் டன் புளி உற்பத்தி செய்து முக்கிய பங்களிப்பு வழங்குகின்றன.


புதிய மையம் முழுமையாக உருவாகும் வரை, புளி விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தேசிய வேளாண் சந்தை (e-NAM) முறையில் விற்பனை செய்ய தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இதன் மூலம்:

  • புளி சேமிப்பு மற்றும் செயலாக்கத்துக்கு நவீன வசதிகள்

  • சந்தை அணுகல் எளிதாக்கம்

  • உயர்ந்த விலை பெறும் வாய்ப்பு

  • 7.5% வரை பரிவர்த்தனைச் செலவு சேமிப்பு

  • 10,000 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நன்மை


விதையற்ற புளி கேக், புளி விழுது, இயற்கை புளி போன்ற மதிப்பேற்றப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்படும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


  • புளி உற்பத்தியாளர்கள்

  • ஏற்றுமதியாளர்கள்

  • விவசாயத் தொழில் முனைவோர்

  • உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்


நேரடி மற்றும் மறைமுக பலன்களை பெறுவர். விளைபொருளின் ஆயுட்காலம் நீடித்து, நல்ல விலை கிடைப்பதன் மூலம் இலாபம் அதிகரிக்கப்படும்.


21.02.2026 அன்று நடைபெறும் அரசு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். புளி விவசாயிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies