தருமபுரி, பிப்.20:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.
தாட்கோ மூலம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது விமானத் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம் மூன்று மாதங்கள் ஆகும்.
பயிற்சியின் போது விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர் சேவை, தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும்.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும். திருப்பூரில் தங்கி படிக்கும் வகையில் விடுதி மற்றும் உணவு செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)