தருமபுரி, பிப்.18:
தருமபுரி மாவட்டம், செந்தில் நகர், வின்சென்ட் திருமண மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா இன்று (18.02.2026) நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை அரசாணை நிலை எண் G.O.(MS) No.157, நாள்: 04.05.2025ன்படி தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் – ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் இந்த மாவட்ட அளவிலான திருவிழா நடத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1,20,000 ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த திருவிழாவில்:
-
சிறுதானிய சாகுபடி முறைகள்
-
பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
-
வீரிய இரகங்கள்
-
சந்தைப்படுத்தும் வழிமுறைகள்
-
மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள்
-
ஊட்டச்சத்து நன்மைகள்
குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
-
அதிக நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக உணர உதவுகிறது.
-
உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.
-
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை சமாளிக்க உதவும்.
-
கம்பில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
-
புரதம், இரும்பு, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
-
கேழ்வரகில் உள்ள சுண்ணாம்பு சத்து குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
-
வரகில் உள்ள நியாசின், போலிக் ஆசிட் போன்றவை கல்லீரல் மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு உதவும்.
சோளம், கேழ்வரகு, சாமை, கம்பு, வரகு போன்றவற்றை கொண்டு பின்வரும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன:
-
பிஸ்கட், ரொட்டி, தோசை, இட்லி
-
சேமியா, நூடுல்ஸ்
-
புட்டு, இடியாப்பம்
-
கலி, உப்புமா, சாதம்
-
அதிரசம், முறுக்கு, ஓமப்பொடி
-
பாயாசம், கேசரி
இவ்வாறான மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறலாம் என்றும், பொதுமக்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு திரும்ப வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, வேளாண்மை இணை இயக்குநர் திரு கு. பழனிசாமி, வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலைய தலைவர் திருமதி வெண்ணிலா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி அ.க. பாத்திமா, விதை ஆய்வு துணை இயக்குநர் திரு நாகராஜன், வேளாண்மை துணை இயக்குநர் திருமதி ர. ரத்தினம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)