Type Here to Get Search Results !

தருமபுரியில் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன்.


தருமபுரி – பிப்ரவரி 03:


தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை இழுத்த சிறப்புமிக்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தைப்பூச திருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி புற்றுமண் எடுத்தல், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள், சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.


திருவிழாவின் ஒரு பகுதியாக பால் குட ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம், பொன்மயில் வாகன உற்சவம், விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் ஆகியவை நடைபெற்றன. இதன் உச்சமாக, தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவசுப்பிரமணிய சாமி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே ஒன்றுகூடி வடம் பிடித்து தேரை நிலை பெயர்த்தது பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும், ஆன்மிக எழுச்சியையும் ஏற்படுத்தியது.


விழாவையொட்டி காலை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10,000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதனை ஆ. மணி உள்ளிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தை ரெ. சதீஷ், எஸ். எஸ். மகேஸ்வரன், ஆ. மணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் மீண்டும் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மேலும், பாரதிதாசன் இளைஞர் மன்றம் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதல் இரவு வரை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வரும் நிகழ்ச்சிகள்:

  • 04.02.2026 (புதன்): வேடர்பறி குதிரை வாகன உற்சவம்

  • 05.02.2026 (வியாழன்): கொடி இறக்கம் & பூப்பல்லாக்கு உற்சவம்

  • 06.02.2026 (வெள்ளி): சயன உற்சவம்


இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை கோயில் செயல் அலுவலர் முருகன், செங்குந்த சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies