தருமபுரி | பிப்ரவரி 09:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 659 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
இன்றைய (09.02.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 659 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற குறள் வினாடி-வினா மற்றும் முதல்நிலை எழுத்துத் தேர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற 30 நபர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அவர்கள் வழங்கினார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி 09.02.2026 முதல் 13.02.2026 வரை அனுசரிக்கப்படும் நிதிசார் கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிதிசார் கல்வி பதாகைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இராஜா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)