தருமபுரி | ஜனவரி 30:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதேமங்கலம் ஊராட்சி – வெங்கட்டம்பட்டி கிராமத்தில், குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதை கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெங்கட்டம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதேமங்கலம் – வெங்கட்டம்பட்டி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற போது, குடிநீர் குழாய்கள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, சாலைப் பணி தொடங்கியதிலிருந்து கிராமத்தின் சில பகுதிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைத்து, கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வெங்கட்டம்பட்டி – தருமபுரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என்றும், உடனடியாக குழாய்களை சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையில், தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும், மேலும் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, நிரந்தர குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
.gif)

.jpg)