தருமபுரி | ஜனவரி 30:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் – 1986 குறித்து மண்டல அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த கருத்தரங்கில்,
-
குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் – 1986,
-
குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கு எதிரான காவல்துறை சட்ட நடவடிக்கைகள்,
-
குழந்தைத் தொழிலாளர்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள்,
-
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கான சட்ட உதவிகள்,
-
குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வில் பல்வேறு துறைகளின் பங்கு,
-
குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் வணிக நிறுவனங்களின் பொறுப்பு
ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து மீட்பது, அவர்களுக்கு கல்வி வழங்குவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். குழந்தைத் தொழிலாளர் முறை சட்டப்படி கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், குழந்தைத் தொழிலாளர் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற பாடுபடுவேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், சேலம் தொழிலாளர் இணை ஆணையர் திருமதி புனிதவதி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் உதவி ஆணையர்கள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)