தருமபுரி – ஜனவரி 09.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு நிகழ்வை பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பிகள் மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலை வகித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 1,079 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை நேரில் சந்தித்து, மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 அரசு திட்டங்களின் செயல்பாடுகள், பயன்கள் மற்றும் பின் மதிப்பீடுகள் குறித்து தகவல் சேகரிக்க உள்ளனர். மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கியமான மூன்று கனவுகளை கணக்கெடுப்பு மூலம் கண்டறிந்து, அவற்றை 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் அ. லலிதா, மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

