தருமபுரி, ஜன. 09:
பொங்கல் திருநாளுக்கு முன் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற அடிப்படையில் போகி பண்டிகையை நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து கொண்டாடி வந்தனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை மட்டுமே தீயிட்டு எரித்ததால், காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள் மற்றும் டியூப்கள், ரசாயனம் கலந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை எரிப்பதால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் நச்சு வாயுக்கள் வெளிப்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், எதிர்வரும் 14 ஜனவரி 2026 அன்று போகி பண்டிகையை மாசில்லாத முறையில் கொண்டாட வேண்டும் என ரெ.சதீஸ், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாடுவது அனைவரின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

