பாலக்கோடு, ஜன. 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் “இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் – 1001” என்ற வரலாற்று நூலை மாவட்ட ஆட்சியர் வெளியிட, முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து “சோழன் வென்ற ஈழம்” என்ற நூலை முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் வெளியிட, சமூக ஆர்வலர் ரவி சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார்.
விழாவில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சதீஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து கீழடி, பொருநை போன்ற இடங்களில் அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்றுச் சான்றுகளை பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டார். சிந்துசமவெளி நாகரீகம் முதல் இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் இந்த இரண்டு நூல்களையும் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றும், குறிப்பாக இராஜேந்திர சோழன் குறித்த ஆயிரம் தகவல்களை ஒருங்கிணைத்திருப்பது மாணவர்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்றும் வாழ்த்தினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில், அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதையும், கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டிருப்பதையும் குறிப்பிட்டு, அவரது நூல்கள் மாணவர்களிடம் வரலாற்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்று பாராட்டினார்.

