பாப்பாரப்பட்டி, ஜன. 09:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிலம்பரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சங்க நிர்வாகிகள் செல்வம், சக்தி மற்றும் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாட்டுப் பாலுக்கு லிட்டருக்கு ரூ.45 மற்றும் எருமை பாலுக்கு ரூ.60 என கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அரசு ஊக்கத் தொகையாக லிட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன் தர அளவை அறிவிக்க வேண்டும், தமிழகத்தில் ISI ஃபார்முலாவை பயன்படுத்தி பாலின் தரம் நிர்ணயம் செய்ய வேண்டும், விலை குறைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்க ஆவின் ஒன்றிய நிர்வாகம் 50 சதவீத நிதி வழங்க வேண்டும், அறிஞர் அண்ணா இன்சூரன்ஸ் திட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் விபத்து மற்றும் இயற்கை மரணங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளி குழந்தைகளின் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

