மொரப்பூர், ஜன. 09:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் சார்பில், எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மொரப்பூர் மற்றும் எலவடை கிராமப்புற பகுதிகளில் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு எச்ஐவி மற்றும் பால்வினை நோய்கள் குறித்து கலை நிகழ்ச்சி, பாடல் மற்றும் நடனங்கள் மூலம் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது, அதைத் தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பான வாழ்க்கை முறைகள் குறித்து எளிய முறையில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் டாக்டர் அரசு, மருத்துவர் டாக்டர் வனிதா, ICTC ஆலோசகர் ஜி. சந்தோஷ் குமார், நவீன், நடமாடும் நம்பிக்கை மையம் (Mobile Trust Centre), LWS, TINGO அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.
மேலும், இந்நிகழ்ச்சியின் போது எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிராமப்புற மக்களிடையே நோய் தடுப்பு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

