மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 31.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஒவ்வோர் ஆண்டும் “குறள்வாரம்” கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, குறள்வார விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, 21.01.2026 அன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி–வினா போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 15 ஆசிரியர்கள் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்) மற்றும் 15 அரசு ஊழியர்கள் (அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை, அனைத்துநிலை அலுவலர்கள்/ஊழியர்கள்) என மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக, தருமபுரி மாவட்டத்தில் 15 ஆசிரியர்கள் மற்றும் 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட அளவிலான முதல்நிலை எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 09.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று, தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்போர், தேர்வு தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள QR Code வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், போட்டிகளுக்கான நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வார விழா தொடர்பான போட்டிகளில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)