Type Here to Get Search Results !

சோளக்கொட்டாயில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு – மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.


தருமபுரி, ஜன.03:

தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோளக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், எம்.பி., பி.எஸ்., அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவு பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். குறிப்பாக, பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அவசியமாக கவனிக்க வேண்டிய அம்சங்களான உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், எடை, எண்ணிக்கை, உட்கூறு மற்றும் ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் குறித்து உணவுப் பொருள் பாக்கெட்டுகளை நேரடியாகக் காண்பித்து விளக்கினார். மேலும், விழிப்புணர்வு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பார்வையிட்டனர். அப்போது, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், வீட்டளவில் எளிதாக உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறியும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.


தேயிலை, தேன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, நெய், சமையல் எண்ணெய், பால், வெல்லம், பச்சை பட்டாணி, சாயம் ஏற்றப்பட்ட பச்சை பட்டாணி, செர்ரி பழம் உள்ளிட்ட பல்வேறு அன்றாட உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறியும் முறைகள் குறித்து உண்மையான உணவுப் பொருட்களை பயன்படுத்தி நேரடி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், சைவ – அசைவ உணவுகளின் அடையாள வேறுபாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.


விழிப்புணர்வு அரங்கில் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு, தரமான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், கலப்படம் உள்ளதும் இல்லாததும் ஆகிய உணவுப் பொருட்கள், பொட்டலமிடப்பட்ட உணவுப் பாக்கெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வரங்கினை முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. பழனியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டு, கலப்படம் கண்டறிதல் தொடர்பான செயல் விளக்கத்தை கவனித்தனர்.


மேலும், பொதுமக்கள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உணவுப் பொருட்களில் கலப்படம் அல்லது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க, உணவு பாதுகாப்புத் துறை புகார் எண் 94440 42322-க்கு தொடர்பு கொள்ளலாம் என விழிப்புணர்வு செய்யப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies