தருமபுரி – ஜனவரி 12:
பொங்கல் திருநாளுக்கு முன், “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற மரபை அடிப்படையாகக் கொண்டு நமது முன்னோர்கள் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்ததாகவும், இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை மட்டும் எரித்ததால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய சூழ்நிலையில், போகிப்பண்டிகையின் போது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், டியூப்கள், காகிதம் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் பொதுமக்களுக்கு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு தூய்மை இயக்கம் (5.0) திட்டத்தின் கீழ், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை தரம் பிரித்து, 14-ஜனவரி 2026 அன்று வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா மற்றும் மாசில்லா போகிப் பண்டிகையை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

.jpg)