தருமபுரி – ஜனவரி 12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 261 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலிருந்தார்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா வழங்கல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் இட்டுவைப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பயிலும் 27 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.18.25 இலட்சம் மதிப்பீட்டில் இட்டுவைப்பு பத்திரங்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு சுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு ஆ.க. அசோக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)