Type Here to Get Search Results !

பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.


பென்னாகரம் | ஜனவரி 13:


பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள சந்தை தோப்பு பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் இந்த வாரச் சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக மலைப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக சேலம், தலைவாசல், கெங்கவல்லி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.


இன்று நடைபெற்ற வாரச் சந்தைக்கு பொங்கல் பண்டிகையையொட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளின் எடைக்கு ஏற்ப ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு விலை கேட்டதால் ஆடுகள் விற்பனை மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.


இதனுடன், பொங்கல் பண்டிகைக்கு தேவையான மாடுகளுக்கான மூக்கணாங்குயிர்கள், பானைகள், கரும்பு, வெல்லம், கோலத்திற்கு பயன்படும் பலவித வண்ணப் பொடிகள் உள்ளிட்ட பொருட்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை வாங்குவதற்காக காலை முதல் ஏராளமான பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர்.


மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (16.01.2026) கூடுதலாக வாரச் சந்தை நடைபெறும் என சந்தை குத்தகைதாரர் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies