தருமபுரி, ஜன. 13:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பால்வளத் துறையின் கீழ் அமைக்கப்பட்ட நவீன நுண்ணுயிரியல் ஆய்வக கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் ரூ.47.05 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன நுண்ணுயிரியல் ஆய்வக கட்டடம் திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து ஆய்வகத்தை பார்வையிட்டார்கள்.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் தற்போது 246 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் 39 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தினசரி சுமார் 1,50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சுமார் 7,000 லிட்டர் பால் உள்ளூர் விற்பனைக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீதமுள்ள சுமார் 1,43,000 லிட்டர் பால் சென்னை மாநகர தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பாலில் உள்ள நுண்ணுயிரிகள், பாலின் தரம், காப்புத் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்திடவும், பாலின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் நோக்கிலும், “தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் 2024–25”ன் கீழ் இந்த நவீன நுண்ணுயிரியல் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாய்வகம் பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம் பால் தரக் கட்டுப்பாடு மேலும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, தருமபுரி ஆவின் பொது மேலாளர் திருமதி. மாலதி, துணைப் பதிவாளர் (பால்வளம்), பால்வளத் துறை அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)